Monday, May 14, 2012

குரு



ச. சுப்பாராவ்

திகாரத்தில் உள்ளோர் செய்யும் எளிய செயல்களுக்குக் கூட பெரும் ஆரவாரமும் வரவேற்பும் கிடைப்பது இயல்புதானே. சிறிய இலக்குகளை குறி தவறாது அம்பினால் வீழ்த்துவது ஒரு பெரிய காரியமா?  இரும்பினால் செய்யப்பட்ட பன்றி உருவம் ஒன்று மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் வாயில் ஒரே கணத்தில் ஐந்து பாணங்களை விட்டான் அர்ஜுனன். ஒரே ஆரவாரம்.  மேலே ஒரு நிஜ மாட்டைக் கயிற்றில் தொங்க விட்டிருந்தார்கள்.  தலையை ஆட்டியபடி தப்பிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் அதன் வலது கொம்பில் சரசரவென்று இருபத்தியோரு பாணங்களை விட்டான் அவன்.

மீண்டும் ஆரவாரம்.  உண்மையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத்தம் இதைவிட பரபரப்பாக, சுவாரஸ்யமாக இருந்தது.  ரசிகர்களுக்குள் சண்டை வர ஆரம்பித்ததும் பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.
அது வீரம், சாகசம்.  மற்றொரு வீரனோடு மோதுவதல்லவா வீரம். இரும்புப் பன்றியை அடிப்பதில் என்ன இருக்கிறது ?  இந்த அர்ஜுனனுக்கு வீரமிருந்தால் என்னோடு மோதட்டும். கர்ணன் தன் தோள்களைத் தட்டியபடி களத்தில் இறங்கினான்.

மலைகள் பிளக்கப்படுகின்றனவா?  பூமி வெடித்து விட்டதா?  நீர்த்தாரைகள் சேர்ந்த மேகங்கள் சேரும்பொது உண்டாகும் இடி முழக்கமா? இது என்ன சத்தம் என்று தெரியவில்லயே என்றான் அரசர் திருதராஷ்டிரனுக்காக நேர்முக வர்ண்னை செய்யும் சஞ்சயன்.  அவன் இப்படி மிகைப்படுத்திக் கூறுவதை மக்கள் அனைவரும் ரசிப்பார்கள்.

கர்ணன் பெரும் மலை ஒன்று  நடந்து வந்தது போல் நடந்து வந்தான்.  “அர்ஜுனா, நீ எந்தக் காரியத்தைச் செய்தாயோ, அவற்றை விட சிறந்த காரியங்களை இந்த சபையில் நான் செய்து காட்டப் போகிறேன், பார்.  வீணாக கர்வம் கொள்ளாதே,” என்றான் கர்ணன்.  சபையில் பெரும் ஆரவாரம். துரோணாச்சாரியாரின் அனுமதி பெற்று அவ்விதமே செய்தும் காட்டினான். அடுத்து அவன் கேட்டதுதான் சபையோரை திகைப்படையச் செய்தது. தன் கம்பீரமான குரலில் தான் அர்ஜுனனுடன் துவந்த யுத்தம் செய்ய விரும்புவதாகச் சொன்னான்.

அர்ஜுனன் கடும் சினத்தோடு, “கர்ணா, நீ என் பாணங்களால் அடிபட்டு இறக்கப் போகிறாய். இறந்ததும், அழைக்கப்படாமல் வந்தவர்களும், சபா நாயகரின் அனுமதியின்றிப் பேசுபவர்களும் அடையக்கூடிய நரகத்தை அடையப் போகிறாய்,” என்றான்.

“சபை அனைவருக்கும் பொது. இதில் உனக்கு என்ன தனி அதிகாரம் இருக்கிறது? நீ பேசாதே. உன் ஆயுதங்கள் பேசட்டும்,” என்றான் கர்ணன்.
அர்ஜுனன் சண்டைக்குத் தயாரானான். அவனது சகோதரர்கள் அவனைக் கட்டித் தழுவி உற்சாகப்படுத்தினர்.

அப்போது, கிருபாச்சாரியார், “குந்தியின் இளைய புத்திரனும், பாண்டுவின் புத்திரனுமான அர்ஜுனன் யுத்தம் செய்ய வருகிறான்.  அது போல, கர்ணனே ! நீயும் உன் தாய், தந்தையரின் பெயரைச் சொல். நீ எந்த நாட்டின் அரசன் என்பதைச் சொல். குலமும், குலாசாரமும் சமமாக இல்லாதவர்களோடு அரசகுமாரர்கள் யுத்தம் செய்வதில்லை,” என்றார்.

கிருபருடைய வார்த்தைகளைக் கேட்டு கர்ணன் தலைகுனிந்து  நின்றான். மழை ஜலத்தினால் நனைந்த தாமரை போல அவன் நின்றதாக சஞ்சயன் சொன்ன போது, கண் பார்வையற்ற மன்னனுக்கு பாவமாக இருந்தது.

ஆனால், அஸ்தினாபுரத்தின் வருங்கால அரசன் துரியோதனன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை. “ஆச்சாரியாரே! அரச ஜாதியை சாஸ்திரங்கள் மூன்று வகையாகக் கூறும்.  நல்ல குலத்தில் பிறந்தவன் ஒருவன்; சூரன் ஒருவன்; சேனையை நடத்துபவன் மற்றொருவன்.  ஜலத்திலிருந்து அக்கினியும், பிராமண ஜாதியிலிருந்து சத்திரிய ஜாதியும், கல்லிலிருந்து லோகமும் உண்டாகின்றன.  அவற்றின் சக்தி எங்கும் வியாபிக்கின்றன.  அர்ஜுனன் அரசனல்லாதவனோடு யுத்தம் செய்ய மறுத்தால், கர்ணனை இப்போதே அங்க நாட்டின் அரசாக்குகிறேன்,” என்றான்.

இளவரசனின் விருப்பமல்லவா! அடுத்த கணம் கர்ணனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த நிமிடம் கிரீடம், ஹாரம், தோள்வளை அணிவிக்கப்பட்டன. வெண்சாமரம் வீச, வெண்கொற்றக் குடை பிடிக்கப் பெண்கள் சூழ்ந்தனர். ஒரக்கண்ணால் அந்தப் பெண்களைப் பார்த்தபோழுது, ஒரு பெண் ரகசியமாய்ச் சிரிப்பதாகப் பட்டது. இது அவளது சிரிப்பல்ல; ராஜ்ஜிய லட்சுமியின் சிரிப்பு, என்று நினைத்துக்கொண்டான் கர்ணன்.

பட்டாபிஷேகத்தின் ஈரம் காயாத தலையோடு, கூட்டத்தில் நடுங்கியபடி நின்றிருந்த தன் தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் கர்ணன்.  தன் கால் தூசியால் தன் மகனின் தலை அழுக்காகிவிடக் கூடாது என்று தன் கால்களை தன் வேட்டியால் மறைத்துக் கொண்டான் அந்தத் தேரோட்டி. மகனின் புதிய அந்தஸ்து காரணமாக தயக்கத்துடன் ஆசி வழங்கினான்.

கர்ணனின் தந்தை ஒரு தேரோட்டி என்ற தகவல் சபையில் வெளிப்பட்ட போது மீண்டும் சலசலப்பு.  பீமன்,  “கர்ணா, வில்லைக் கீழே போட்டுவிட்டு, சாட்டையை எடுத்துக் கொள்.  யாகத்தில் அக்கினிக்கு அருகில் உள்ள ஹவிஸை உண்பதற்கு நாய் எவ்வாறு தகுதியற்றதோ, அதே போல நீயும் அங்க  நாட்டை ஆளத் தகுதியற்றவன்,” என்றான். கர்ணனின் உதடுகள் துடித்தன. செய்வதறியாது வானம் பார்த்து நின்றான்.

இடைமறித்தான் துரியோதனன். “பீமா, நீ இவ்விதம் பேசுவது தகாது.  சூரர்களுக்கும், நதிகளுக்கும் மூலம் காணலாகாது.  ஜங்கம ஸ்தாவரங்கள் எல்லாவற்றையும் எரிக்கும் அக்கினி ஜலத்திலிருந்து உண்டாயிற்று.  சுப்ரமண்யரை அக்கினி புத்திரர் என்றும், க்ருத்திகா புத்திரர் என்றும், கங்கா புத்திரர் என்றும் கேள்வியுறுகிறோம். விஸ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தவர். பிராமணரல்லர்.  நம் ஆச்சாரியரான துரோணர் கும்பத்திலிருந்து பிறந்தார். கிருபாச்சாரியார் கோதமருடைய வம்சத்தில் நாணல் காட்டில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்.  உங்கள் சகோதரர் பிறப்பும் அனைவரும் அறிந்ததே. அவற்றைப் பற்றி விபரமாக உன்னால் சொல்ல முடியுமா தம்பி,” என்றான்.

கடைசியில் தன் பிறப்பும், கிருபர் பிறப்புமே கேள்விக் குறியானதும் துரோணர் பதறினார்.  நல்லவேளையாக சூரியன் அஸ்தமித்தான்.  போட்டிகள் முடிந்தன, “சபை கலையலாம்,” என்று அறிவித்தார் அச்சாரியர் துரோணர். மக்கள் இரு கட்சியாகப் பிரிந்து வீடு சென்றனர்.

மறு நாள் அதிகாலையில் கர்ணன் யமுனையில் நீராடி, சூரிய வழிபாட்டை ஆரம்பித்தபோது, அவனருகே ஒரு உருவம் தயங்கித் தயங்கி வந்தது. உஷத்கால இருளில் யார் என்று தெரியவில்லை. “யார் நீங்கள்? என்ன வேண்டும்,” என்றான் கர்ணன். நேற்று வரை அவன் ஒரு சாதாரண தேரோட்டி மகன். இன்று அங்கதேசத்து அரசன். யாரையும் பார்த்து என்ன வேண்டும் என்று தைரியமாகக் கேட்கலாம். கேட்டதைத் தயங்காமல் தரவும் இன்று சக்தி இருக்கிறது.

தன் முக்காடை நீக்கியது அந்த உருவம்.  குரு குலத்தின் குலகுரு- துரோணச்சாரியர்- தனது வார்த்தை விளையாட்டை நினைத்து கர்ணனுக்கே சிரிப்பாக வந்தது. காலில் விழுந்து வணங்கினான். “இத்தனை அதிகாலையில் தாங்கள் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன என்று அறியலாமா? தாங்களுக்கு என்ன வேண்டும்,” என்று கூறுங்கள் ஸ்வாமி, என்றான்.

“மன்னர் திருதிராஷ்டிரர் அரவணைப்பில் எனக்கு யாதொரு குறையும் இல்லை. ஒரே ஒரு தகவல் மட்டும் உன்னிடம் அறிந்து செல்ல வந்தேன். இததனை சாகசங்களைச் செய்யும்படி உனக்கு வில்வித்தை கற்றுத் தந்த அந்த குரு யார்?  நேற்றிரவு முழுவதும் நான் உறங்கவில்லை. எப்போதடா விடியும் என்று உன்னை ரகசியமாகச் சந்திக்க யமுனைத்துறைக்கு வந்தேன்,” என்றார்.

“இந்த சூத்திரனுக்கு யார் கற்றுத்தர முன்வருவார்கள் ? மற்றொரு சூத்திரன்தான்,” என்றான் கர்ணன்.

அஸ்தினாபுரத்தில் நான் அறியாமல் ஒரு சூத்திர குரு வேறு இருக்கிறாரா? தாடியை நீவியபடி யோசித்தார் துரோணர்.

“கட்டை விரல் இல்லாவிட்டால் என்ன? வாய்தானே சொல்லித்தரப் போகிறது என்பார் என் குருநாதர்,” என்றவாறு தன் குரு இருக்கும் திசை நோக்கித் தொழுதான் கர்ணன்.

‘எப்படி மறைத்தாலும் அவரைத் தடுக்க முடியாது போலும்,’ என்று  நினைத்தவாறே, யமுனையில் மூழ்கினார் துரோணாச்சாரியார்.

(தீக்கதிர் 13.5.2012 இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் வெளியாகியுள்ளது இந்த மறுவாசிப்புக் கதை)