Monday, May 14, 2012

குரு



ச. சுப்பாராவ்

திகாரத்தில் உள்ளோர் செய்யும் எளிய செயல்களுக்குக் கூட பெரும் ஆரவாரமும் வரவேற்பும் கிடைப்பது இயல்புதானே. சிறிய இலக்குகளை குறி தவறாது அம்பினால் வீழ்த்துவது ஒரு பெரிய காரியமா?  இரும்பினால் செய்யப்பட்ட பன்றி உருவம் ஒன்று மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் வாயில் ஒரே கணத்தில் ஐந்து பாணங்களை விட்டான் அர்ஜுனன். ஒரே ஆரவாரம்.  மேலே ஒரு நிஜ மாட்டைக் கயிற்றில் தொங்க விட்டிருந்தார்கள்.  தலையை ஆட்டியபடி தப்பிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் அதன் வலது கொம்பில் சரசரவென்று இருபத்தியோரு பாணங்களை விட்டான் அவன்.

மீண்டும் ஆரவாரம்.  உண்மையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத்தம் இதைவிட பரபரப்பாக, சுவாரஸ்யமாக இருந்தது.  ரசிகர்களுக்குள் சண்டை வர ஆரம்பித்ததும் பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.
அது வீரம், சாகசம்.  மற்றொரு வீரனோடு மோதுவதல்லவா வீரம். இரும்புப் பன்றியை அடிப்பதில் என்ன இருக்கிறது ?  இந்த அர்ஜுனனுக்கு வீரமிருந்தால் என்னோடு மோதட்டும். கர்ணன் தன் தோள்களைத் தட்டியபடி களத்தில் இறங்கினான்.

மலைகள் பிளக்கப்படுகின்றனவா?  பூமி வெடித்து விட்டதா?  நீர்த்தாரைகள் சேர்ந்த மேகங்கள் சேரும்பொது உண்டாகும் இடி முழக்கமா? இது என்ன சத்தம் என்று தெரியவில்லயே என்றான் அரசர் திருதராஷ்டிரனுக்காக நேர்முக வர்ண்னை செய்யும் சஞ்சயன்.  அவன் இப்படி மிகைப்படுத்திக் கூறுவதை மக்கள் அனைவரும் ரசிப்பார்கள்.

கர்ணன் பெரும் மலை ஒன்று  நடந்து வந்தது போல் நடந்து வந்தான்.  “அர்ஜுனா, நீ எந்தக் காரியத்தைச் செய்தாயோ, அவற்றை விட சிறந்த காரியங்களை இந்த சபையில் நான் செய்து காட்டப் போகிறேன், பார்.  வீணாக கர்வம் கொள்ளாதே,” என்றான் கர்ணன்.  சபையில் பெரும் ஆரவாரம். துரோணாச்சாரியாரின் அனுமதி பெற்று அவ்விதமே செய்தும் காட்டினான். அடுத்து அவன் கேட்டதுதான் சபையோரை திகைப்படையச் செய்தது. தன் கம்பீரமான குரலில் தான் அர்ஜுனனுடன் துவந்த யுத்தம் செய்ய விரும்புவதாகச் சொன்னான்.

அர்ஜுனன் கடும் சினத்தோடு, “கர்ணா, நீ என் பாணங்களால் அடிபட்டு இறக்கப் போகிறாய். இறந்ததும், அழைக்கப்படாமல் வந்தவர்களும், சபா நாயகரின் அனுமதியின்றிப் பேசுபவர்களும் அடையக்கூடிய நரகத்தை அடையப் போகிறாய்,” என்றான்.

“சபை அனைவருக்கும் பொது. இதில் உனக்கு என்ன தனி அதிகாரம் இருக்கிறது? நீ பேசாதே. உன் ஆயுதங்கள் பேசட்டும்,” என்றான் கர்ணன்.
அர்ஜுனன் சண்டைக்குத் தயாரானான். அவனது சகோதரர்கள் அவனைக் கட்டித் தழுவி உற்சாகப்படுத்தினர்.

அப்போது, கிருபாச்சாரியார், “குந்தியின் இளைய புத்திரனும், பாண்டுவின் புத்திரனுமான அர்ஜுனன் யுத்தம் செய்ய வருகிறான்.  அது போல, கர்ணனே ! நீயும் உன் தாய், தந்தையரின் பெயரைச் சொல். நீ எந்த நாட்டின் அரசன் என்பதைச் சொல். குலமும், குலாசாரமும் சமமாக இல்லாதவர்களோடு அரசகுமாரர்கள் யுத்தம் செய்வதில்லை,” என்றார்.

கிருபருடைய வார்த்தைகளைக் கேட்டு கர்ணன் தலைகுனிந்து  நின்றான். மழை ஜலத்தினால் நனைந்த தாமரை போல அவன் நின்றதாக சஞ்சயன் சொன்ன போது, கண் பார்வையற்ற மன்னனுக்கு பாவமாக இருந்தது.

ஆனால், அஸ்தினாபுரத்தின் வருங்கால அரசன் துரியோதனன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை. “ஆச்சாரியாரே! அரச ஜாதியை சாஸ்திரங்கள் மூன்று வகையாகக் கூறும்.  நல்ல குலத்தில் பிறந்தவன் ஒருவன்; சூரன் ஒருவன்; சேனையை நடத்துபவன் மற்றொருவன்.  ஜலத்திலிருந்து அக்கினியும், பிராமண ஜாதியிலிருந்து சத்திரிய ஜாதியும், கல்லிலிருந்து லோகமும் உண்டாகின்றன.  அவற்றின் சக்தி எங்கும் வியாபிக்கின்றன.  அர்ஜுனன் அரசனல்லாதவனோடு யுத்தம் செய்ய மறுத்தால், கர்ணனை இப்போதே அங்க நாட்டின் அரசாக்குகிறேன்,” என்றான்.

இளவரசனின் விருப்பமல்லவா! அடுத்த கணம் கர்ணனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த நிமிடம் கிரீடம், ஹாரம், தோள்வளை அணிவிக்கப்பட்டன. வெண்சாமரம் வீச, வெண்கொற்றக் குடை பிடிக்கப் பெண்கள் சூழ்ந்தனர். ஒரக்கண்ணால் அந்தப் பெண்களைப் பார்த்தபோழுது, ஒரு பெண் ரகசியமாய்ச் சிரிப்பதாகப் பட்டது. இது அவளது சிரிப்பல்ல; ராஜ்ஜிய லட்சுமியின் சிரிப்பு, என்று நினைத்துக்கொண்டான் கர்ணன்.

பட்டாபிஷேகத்தின் ஈரம் காயாத தலையோடு, கூட்டத்தில் நடுங்கியபடி நின்றிருந்த தன் தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் கர்ணன்.  தன் கால் தூசியால் தன் மகனின் தலை அழுக்காகிவிடக் கூடாது என்று தன் கால்களை தன் வேட்டியால் மறைத்துக் கொண்டான் அந்தத் தேரோட்டி. மகனின் புதிய அந்தஸ்து காரணமாக தயக்கத்துடன் ஆசி வழங்கினான்.

கர்ணனின் தந்தை ஒரு தேரோட்டி என்ற தகவல் சபையில் வெளிப்பட்ட போது மீண்டும் சலசலப்பு.  பீமன்,  “கர்ணா, வில்லைக் கீழே போட்டுவிட்டு, சாட்டையை எடுத்துக் கொள்.  யாகத்தில் அக்கினிக்கு அருகில் உள்ள ஹவிஸை உண்பதற்கு நாய் எவ்வாறு தகுதியற்றதோ, அதே போல நீயும் அங்க  நாட்டை ஆளத் தகுதியற்றவன்,” என்றான். கர்ணனின் உதடுகள் துடித்தன. செய்வதறியாது வானம் பார்த்து நின்றான்.

இடைமறித்தான் துரியோதனன். “பீமா, நீ இவ்விதம் பேசுவது தகாது.  சூரர்களுக்கும், நதிகளுக்கும் மூலம் காணலாகாது.  ஜங்கம ஸ்தாவரங்கள் எல்லாவற்றையும் எரிக்கும் அக்கினி ஜலத்திலிருந்து உண்டாயிற்று.  சுப்ரமண்யரை அக்கினி புத்திரர் என்றும், க்ருத்திகா புத்திரர் என்றும், கங்கா புத்திரர் என்றும் கேள்வியுறுகிறோம். விஸ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தவர். பிராமணரல்லர்.  நம் ஆச்சாரியரான துரோணர் கும்பத்திலிருந்து பிறந்தார். கிருபாச்சாரியார் கோதமருடைய வம்சத்தில் நாணல் காட்டில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்.  உங்கள் சகோதரர் பிறப்பும் அனைவரும் அறிந்ததே. அவற்றைப் பற்றி விபரமாக உன்னால் சொல்ல முடியுமா தம்பி,” என்றான்.

கடைசியில் தன் பிறப்பும், கிருபர் பிறப்புமே கேள்விக் குறியானதும் துரோணர் பதறினார்.  நல்லவேளையாக சூரியன் அஸ்தமித்தான்.  போட்டிகள் முடிந்தன, “சபை கலையலாம்,” என்று அறிவித்தார் அச்சாரியர் துரோணர். மக்கள் இரு கட்சியாகப் பிரிந்து வீடு சென்றனர்.

மறு நாள் அதிகாலையில் கர்ணன் யமுனையில் நீராடி, சூரிய வழிபாட்டை ஆரம்பித்தபோது, அவனருகே ஒரு உருவம் தயங்கித் தயங்கி வந்தது. உஷத்கால இருளில் யார் என்று தெரியவில்லை. “யார் நீங்கள்? என்ன வேண்டும்,” என்றான் கர்ணன். நேற்று வரை அவன் ஒரு சாதாரண தேரோட்டி மகன். இன்று அங்கதேசத்து அரசன். யாரையும் பார்த்து என்ன வேண்டும் என்று தைரியமாகக் கேட்கலாம். கேட்டதைத் தயங்காமல் தரவும் இன்று சக்தி இருக்கிறது.

தன் முக்காடை நீக்கியது அந்த உருவம்.  குரு குலத்தின் குலகுரு- துரோணச்சாரியர்- தனது வார்த்தை விளையாட்டை நினைத்து கர்ணனுக்கே சிரிப்பாக வந்தது. காலில் விழுந்து வணங்கினான். “இத்தனை அதிகாலையில் தாங்கள் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன என்று அறியலாமா? தாங்களுக்கு என்ன வேண்டும்,” என்று கூறுங்கள் ஸ்வாமி, என்றான்.

“மன்னர் திருதிராஷ்டிரர் அரவணைப்பில் எனக்கு யாதொரு குறையும் இல்லை. ஒரே ஒரு தகவல் மட்டும் உன்னிடம் அறிந்து செல்ல வந்தேன். இததனை சாகசங்களைச் செய்யும்படி உனக்கு வில்வித்தை கற்றுத் தந்த அந்த குரு யார்?  நேற்றிரவு முழுவதும் நான் உறங்கவில்லை. எப்போதடா விடியும் என்று உன்னை ரகசியமாகச் சந்திக்க யமுனைத்துறைக்கு வந்தேன்,” என்றார்.

“இந்த சூத்திரனுக்கு யார் கற்றுத்தர முன்வருவார்கள் ? மற்றொரு சூத்திரன்தான்,” என்றான் கர்ணன்.

அஸ்தினாபுரத்தில் நான் அறியாமல் ஒரு சூத்திர குரு வேறு இருக்கிறாரா? தாடியை நீவியபடி யோசித்தார் துரோணர்.

“கட்டை விரல் இல்லாவிட்டால் என்ன? வாய்தானே சொல்லித்தரப் போகிறது என்பார் என் குருநாதர்,” என்றவாறு தன் குரு இருக்கும் திசை நோக்கித் தொழுதான் கர்ணன்.

‘எப்படி மறைத்தாலும் அவரைத் தடுக்க முடியாது போலும்,’ என்று  நினைத்தவாறே, யமுனையில் மூழ்கினார் துரோணாச்சாரியார்.

(தீக்கதிர் 13.5.2012 இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் வெளியாகியுள்ளது இந்த மறுவாசிப்புக் கதை)

Sunday, August 12, 2007

வரவேற்போம் வாழத்தூண்டும் வரலாறுகளை

கெங்கை குமார்

ழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களை ஓங்கி ஒலிப்பதாக கூறிக் கொண்டி ருக்கும் வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நகர்வையும் நாம் கண்காணித்திருக்க வேண்டும். சூழ்நிலை கேற்றவாறு பரபரப்புச் செய்திகளாகக் குடிசைகளை எறிப்பதை தீவிபத்து என்றும், கற்பழிப்புகளை விபச்சாரம் என்றும், கொத்தடிமை முறைகளை குழந்தை களை விற்றல் என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக் கின்றன.இவைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களைப் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது உள்ளக் கிடக்கைகளையும் விழிப்புணர்வுப் படைப்புகளாகக்குகிற முயற்சிகளும் நடக்கின்றன. சூழலுக் கேற்றவாறு சில சமயங்களில் அவை வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகளில் கூட அனுதாபங்களையும் பிறரின் பச்சாதாபங் களையும் பெறுகின்ற வகையில்தான் பெரும்பாலும் வருகின்றனவே தவிர உண்மையான விடுதலைக் கருத்தியாகவோ அல்லது அதை நோக்கி இட்டுச் செல்பவைகளாகவோ இன்னும் செழுமை பெறவில்லை.

உழைக்கும் மக்கள் தங்களின் கூன் முதுகை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி அநீதிக்கு எதிராகவும், ஒடுக்குதலுக்கு முரனாகவும் தங்களை அடையாளப்படுத்தி, அணிதிரண்டு போராடிய போராட்டங்கள் பல நடந்திருந்தாலும், இன்றும் நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், அவைகளின் வரலாற்றுப் பதிவுகள் என்பது இன்றளவும் மேம்போக்ககாகத்தான் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.``வரலாற்றைத் திருத்தி பதிவு செய்துக் கொண்டிருக்கும் வந்தேதிகாளல்தான் நம் முடைய உண்மைச் சுவடுகளும் மூடிமறைக்கப்பட்டு வருகிறது’’ என நாம் பிறரைக் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, நமக்கான வரலாறுகளை, காயங்களை புறை யோடிப் போயிருக்கும் அழுகிய புண்களாக நாம் எப்போது முறையாகப் பதிவு செய்யப் போகிறோம்?

ஆங்காங்கு நடத்துக் கொண்டிருக்கும் உரிமை மீறல்களையும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளையும் அட்டூழியங்களையும் எங்கோ ஒருசிலர் ஒரு சில உதவி களோடு, பதிவுகளாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தலித் விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டுவரும் சில அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில இடங்களில் இயங்கிக் வருகின்றன. என்றாலும், அவைகளுக்கான ஆவணப்பதிவுகளின் நோக்கம் வரலாற்றுப் பதிவுகளாக ஒருபோதும் இருந்ததில்லை. தங்களது அமைப்பு மற்றும் சுயதேவைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டவைகளாகவே இருக் கின்றன.

எப்படியிருந்தாலும் ஒருசில ஆர்வலர்கள், இளம்படைப்பாளிகள் இந்த சமூகத்தின் மீது தாம் கொண்டுள்ள தன்னார்வ அக்கறையின் காரணமாக பிறப்பால் தலித்துகளாக இல் லாத நிலையிலும், வர்க்கத்தால் கூலிகளாக இல்லையென்றாலும், உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களை அதிலும் குறிப்பாக தலித்து களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் பெற்ற வெற்றிக் கொண்டாட் டங்களையும், பண்பாடு மாறாமல் பதிவு செய்துத் தரும்போது, அவைகளுக்கான முக்கியத் துவத்தை முன்னிலைப் படுத்தாமல், அந்தப் படைப்பாளிகளுக்கான அங்கீகாரத்தை கொடுக்காமல், சாதி முத்திரை குத்திப்பார்த்தும் வர்க்கப் பின்னணியை பொருத்திப் பார்த் தும் அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஓரங்கட்டுவது என்பது எந்த வகையில் நேர்மையானதாகும்?

காஞ்சனை சீனிவாசனின் நதியின் மரணம், மதுரை அமுதனின் பீ, செய்யாறு ஓம் பிரகாஷின் புதுயுகம், தலீத் பூமி சேலம் ஆண்டோவின் தும்பலில் இன்று குடியரசு தினம், முருக சிவக்குமாரின் விடுதி, பாரதி கிருஷ்ணகுமாரின் ராமய்யாவின் குடிசை என இன்னும் பல அற்புதமான படைப்பாளிகளும், அவர்களது ஈடு இணையற்ற படைப்பு களும் இன்னும் பட்டியல்களாகத்தானே இருந்து கொண்டிருக் கின்றன?குறுங்குழுவாதம் பேசிக் கொண்டும், குரூர சிந்தனையை வளர்த்துக் கொண்டும் சிலர் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இத்தகைய படைப்பாளிகளும், படைப்புகளும் பல் வேறு தளங்களில் பலவிதமான பாதிப்புகளையும் அதிர்வுகளை யும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. அவைகளை ஜீர ணிக்க முடியாமல் முரண்பாடாக சிலர் முணகிக்கொண்டி ருப்பதினால் என்ன பயனை அடைந்துவிட முடியும்!

கருத்துச் சுதந்திரமும், சமூக அக்கறையும் கைகோர்த்துக் கொண்டு வரும்போதுதான் நம்மீது திணிக்கப்பட்டுள்ள, நாமாக உள்வாங்கிக் கொண்டுள்ள வர்க்க, வர்ண- முரண் பாடுகளை உடைத்துக் காட்டமுடியும். அவைகளைக் கடந்து வெளிவர முடியும். அதை விட்டுவிட்டு தர்மம் பேசுகிறேன் பேர் வழி என்று போலி புரட்சிவாதம் பேசிக் கொண்டுஅநீதியான சமூக கட்டமைப்பை ஞாயப்படுத்திக் கொண்டு தங்களுக்கான சார்புத் தன்மையோடு வர்ண- வர்க்கவாதம் நடத்திக் கொண்டு, உண்மையான படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் புறக்கணிக்கிறார்கள் என்றால் இப்படிப்பட்ட வர்களை எந்த ரகத்தில் பொருத்திப் பார்ப்பது?கடந்த ஜூலை 14 அன்று சென்னை டான் போஸ்கோ சமூகத் தொடர்பு கல்விமையம்-தீபிகா அரங்கில் அதிர்வுகள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் `` ஊடகமும் உழைக்கும் மக்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பட்டது. “ஆவணப்படங்களும் அவை தரும் பாதிப்புகளும்” என்ற தலைப்பில் காஞ்சனை சீனிவாசன் பேசினார். பாரதி கிருஷ்ண குமார் கருத்துரை வழங்கினார்.

`அடங்கமறு’ என்ற ஆவணக் குறும்படத்தை உருவாக்கிய இளம் படைப்பாளி ஜே.முத்துக் குமார் பேசும்போது, “இது ஆவணக் குறும்படமல்ல. நான் இதைக் குறும்படமாகத்தான் எடுத்தேன்” என்றார்.இந்த “அடங்கமறு” படைப்பானது, 2002ம் ஆண்டு திண் ணியம் கிராமத்தில் இரண்டு தலித்துகளை மனித மலம் திண்ணவைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த சம்பவமும் செய்தியும் உண்மையானதே. அதை அப்படியே நடிகர்களைக் கொண்டு உருவாக்கி அதன் மேல் எந்தவிதமான விமர்சனத்தையும் வைக்காமல், எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல் படைப்பாக்கி வழங்கப்பட்டிருக்கிறது.தலித் மக்கள் அவமானப்படுத்தப்பட்டதும், அதன் உச்சமாக மனித மலத்தை அவர்களது கையாலே அள்ளி உண்ணச் செய் ததும் உலகறிந்த ஒரு மோசமான வன்கொடுமை. இது வரலா றாக பதிவு செய்யப்படாமல், “ எனது கற்பனையால் உருவாக்கப் பட்ட புனைகதைக் குறும்படம்” என்பது நியாயம்தானா? இது குறித்து பார்வையாளர்கள் மத்தியிலிருந்து பல்வேறுவிதமான கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்தப் படைப்புக்கு பின் புலமாயிருந்த பல அம்சங்ளை முத்துக்குமார் பகிர்ந்து கொண் டார்.

பார்வையாளர்களிடமிருந்து, “இந்தச் சம்பவம் நடந்த கால கட்டத்தையோ, இதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுப் பதிவு களையோ ஏன் இதில் இடம்பெறச் செய்யவில்லை” என கேள்வி கள் எழுந்தன. “நீங்கள் குறிப்பிடுகின்ற அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய இன்னொரு பிரதியை நான் பாதுகாப் பாக வைத்திருக்கிறேன். அதுதான் ஆவணக் குறுபம்படம். அதை இங்கு திரையிட நான் தவறிவிட்டேன்” என முத்துக் குமார் பதிலளித்தார்.

படைப்பாளிகள் தங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளவும், அறிவு ஜீவித்தனத்தை வெளிக்காட்டிக்கொள்ளவும் எத்தனை வகையான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள் என்பதற் கான ஒரு உதாரணம்தான் மேற்கண்ட விவாதம். தமக்கென ஒரு குறுகிய வட்டத்தை அமைத்துக்கொண்டு, தன்னை மட்டுமே முதன்மைப்படுத்தி முன்னேறத் துடிக்கும் சிலரால்தான் “தலித்துகளின் வேதனையை தலித்துகளால்தான் உணர முடியும். தலித்துகள் அல்லாதவர்கள் தலித்துகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்ற வாதம் கிளம்புகிறது. இத் தகைய போக்கு எல்லா இடங்களிலுமே இருக்கிறது. தலித் துகளிலேயே கூட தலித் விரோதிகள் இருக்கிறார்கள் என்ப தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எப்படியிருந்தாலும் தலித் அக்கறை, சமூக அக்கறை, அனைத்துமே சமூக விடு தலைக்கான முன்னெடுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

படைப்பாளிகளும், படைப்புகளும் வணிகமய நோக்கில் பார்வையாளர்களை மட்டும் மையப்படுத்தாமல் ஆய்வுக் கண் ணோட்டத்துடன் உண்மைகளை மட்டுமே ஆவணப்பதிவு களாக, வரலாறுகளாக வலம் வர வேண்டும். அதற்கான நியாய மான வாய்ப்புகளை தனி நபர்களோ, நிறுவனங்களோ எவ்வித உள்நோக்கமுமின்றி வழங்க முன்வர வேண்டும்.வர்ணபேதமும், வர்க்க முரண்பாடுகளும் ஒடுக்கப்படும் மக்க ளின் வரலாற்றை அதைத் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு வரும் போலிப் புரட்சியாளர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம்.

எனவே, எதையும் நேர்மையோடு அணுகி, கூர்மைப்படுத்திப் பார்க்கும் பக்குவம் இளம் படைப்பாளிகளுக்கும் வர வேண்டும். அத்தகைய முயற்சிகளை எவ்வித உள்நோக்கமுமின்றி, அங் கீகரிக்கின்ற பக்குவத்தை அனைவருமே வளர்த்துக் கொண்டாக வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களை யும், ஒடுக்கப்படும் மக்களையும் உரிமைக்காகப் போராட வைக்க, நாமும் உந்து சக்திகளாய் இருந்திருக்கிறோம் என்பது வரலாற் றில் பதிவு பெறும். இத்தகைய வரலாறுகள்தான் நாளைய தலை முறையினருக்கு உண்மையான உந்து சக்திகளாக இருக்க முடியும்.பரவலாக இருந்துகொண்டிருக்கிற குறுங்குழுவாதங் களைத் தவிர்த்து, கூட்டுச் சிந்தனைகளை வளர்ப்போம். விழிப் புணர்வையும், விமர்சனப் பார்வையையும் வீதிக்குக் கொண்டு வருவோம். ஊடக ஜனநாயகத்தை உழைக்கும் மக்கள் சார்ந்த அணுகுமுறைகளால் உலகுக்கு அறிமுகப்படுத்துவோம். அதன் மூலம் உழைக்கும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உரிமையோடு பங்கெடுப்போம்.

Friday, July 20, 2007

கள்ளக் காதலும் பெண்ணுரிமையும்


ஸ்நேகா


பெண்களின் கள்ளக்காதல்பற்றி எழுதாத பத்திரிகை கள் மிகக் குறைவு. கணவன்-மனைவி இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டு இன்னொரு ஆணுடன் பெண் உறவு வைத்துக் கொள்வதைத்தான் கள்ளக்காதல் என்று பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. இதுபோன்ற செய்திகள் கிடைத்தால் அதை எழுதுபவர் கற்பனையில் மிதப்பார். அந்த சமயத்தில் அவர் தன் னையே ஒரு பெண்ணாக உருவகித்துக்கொண்டு எழுதுகிற வர்ணனை வக்கிரத்தின் உச்சிக்கே போய்விடும். அந்தப் பெண் ணுக்குக் கணவன் மீது ஏன் வெறுப்பு வந்தது என்ற காரணத் தைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் மிக எளிதாக இன்னொரு ஆணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பற்றி சுவாரசியமாக எழுதுவார். அந்த எழுத்துக்கள் பெரும்பாலும் உடல் சார்ந்ததாக வும் ஆண்-பெண் உறவு சார்ந்ததாகவும் இருக்கும்.


இந்த சமுதாயத்தின் சரிபாதியாக இருக்கிற பெண்ணி னத்தை இழிவுபடுத்துவதான எண்ணமோ, பெண்ணும் ஜீவ னுள்ள உணர்ச்சிகள் பெற்ற மனுஷிதான் என்ற நினைவோ அந்த எழுத்துக்களில் எள்முனையளவும் இருக்காது. மாறாக “காலம் கெட்டுப்போச்சு”, “பொம்பளைங்க ராச்சியமாயிடுச்சி”, “இந்த லெட்சணத்துல இவங்களுக்கு இன்னும் உரிமை வேணு மாம்”, “பொம்பளைங்கள வைக்க வேண்டிய இடத்துல வைக்க ணும்”... என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான பழம் பஞ்சாங்க சிந்தனைகளை மீண்டும் கிளறிவிடக் கூடிய கோல்களாகவே இவர்களின் எழுதுகோல்கள் பயன்படும்.


பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிடும் கொலைக் குற்றங்களுக்கோ இன்னபிற குற்றச்செயல்களுக்கோ கள்ளக் காதல் முத்திரை குத்தி வழக்குப் பதிவு செய்துவிட்டால் எதிர்க் கேள்வி இல்லாமல் எல்லோரும் காவல்துறையின் நிலையையே ஆதரித்து விடுவார்கள் என்கிற ஆணித்தரமான நம்பிக்கை விசாரணை அதிகாரிகளுக்கும் இருக்கிறது.பெண்ணுரிமைகளுக்காக ஏராளமான சட்டங்கள் ஏடுகளில் இருக்கின்றன.


ஆனால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்கிற கேள்வி ஞானமோ கல்வி ஞானமோ பெண்களுக்கு இருக் கிறதா? இவை அவர்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டிருக் கிறதா? பெண்கள் அழுதழுதே சாகின்ற அல்லது உறவுகளுக் காக ஏங்கி ஏங்கித் தேய்ந்து போகிற மெகா தொடர்களைத் தயாரித்துப் பணம் பண்ணுகிறவர்கள் அதில் ஒரு சதவீதத்தை யாவது பெண்ணுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செலவு செய்கிறார்களா?ஒரு பெண்ணுக்குத் திருமணமானபின் அவளது உடல் கணவனின் நுகர்வுப் பண்டமாகி விடுகிறது. அவன் விரும்பும் போதெல்லாம் அதை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் மனைவி என்கிற அந்த மனுஷியின் விருப்பம் அறியப்பட வேண் டிய அவசியமில்லை.


உடலுறவைப் பொறுத்தவரை பெண்ணின் விருப்பமின்றி கணவனே புணர்ந்தாலும் அதைக் கற்பழிப்பு என்கிறது சட்டம். என்ன பயன்? தனது விருப்பத்தைத் தெரி வித்து இப்போது வேண்டாம் என்று எத்தனை பெண்கள் சொல்லிவிட முடியும்? அப்படியே சொல்லிவிட்டால் அதனைக் குத்தலாக நினைக்காமல் சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல் எத்தனை ஆண்கள் இயல்பாக எடுத்துக்கொள்வார்கள்? இயல்பாக உள்ள ஆண்களின் மனநிலையே இப்படி இருக்கும் என் றால் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி சொல்லவே வேண் டாம். இழிமொழியும் ஏச்சும் பேச்சும் சகிக்க முடியாததாகி எதை யும் சகித்துக்கொள்பவளாகப் பெண் ஆகிப்போவாள்.


கணவன் என்று நிச்சயமாகி தாலி கட்டிக் கொள்ள கழுத்தை நீட்டிவிட்ட பின் அவன் என்ன செய்தாலும் சகித்துக்கொண்டு காலம் பூராவும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் பெண்ணுக்கு வாழா வெட்டி, அடங்காப்பிடாரி என்ற புனைப் பெயர் கள் சூட்டப்படும். புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண் கணவனைப் பிடிக்கவில்லையென்று பிறந்த வீட்டுக்கு வந்துவிட முடியாது. பெற்றோர்கள் குடும்ப கவுரவம் பார்ப்பார்கள். திருமணமாகாத தங்கையோ தம்பியோ வீட்டில் இருந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் எனப் புலம்புவார்கள். `செத்தாலும் கட்டியவன் காலடியிலேயே செத்துப்போ’ என்பதுதான் பெற்று வளர்த்தவர்களின் அறி வுரையாக இருக்கும்.


இத்தனையையும் மீறி ஒரு பெண் எப்படி தனது விருப்பத்தை உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும்?தன்னை மணந்தவரோடு இணக்கமாக வாழ முடியாத சூழலில் அவரை விவாகரத்து செய்துவிடும் துணிவோ நேர்மையோ இல் லாமல் ஒப்புக்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது சிறை. அதற்குள் சென்றுவிட்டால் விடுதலை என்பதையே நினைத்துப்பார்க்காத ஆயுள் தண்டனைதான்.


இது ஒரு பக்கம். மறு பக்கம் இளம் வயதில் தாம் விரும்பிய, காத லித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள முடியாமல் தடைகள். சாதி மதத்தடைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு தடைகள். ஒருபக்கம் உறவினர்களை உதறித் தள்ளி விட்டு வாழத்துணிவின்மை; மறுபக்கம் கனவு கள் கலைந்து மனதார விரும்பியவர் கிடைக் காததால் ஏற்படும் தவிப்பு. கயிறிழுப்புப் போட்டிபோல் இரு பக்கமும் இழுபடும் மனோ பாவம்.


இதெல்லாம் சில சயமம் சில பெண் களை நேர்மையுள்ளவர்களாக இருக்கவிடுவ தில்லை.சமூக பொருளாதாரச் சூழலும் பெண்களை சாதிச் சூழலில் இழுத்துக் கொள் கிறது. வாழ்க்கை என்பதே உற்பத்திப் பொருள்களை அனுபவிப்பதற்காகத்தான் என்று திரும்பும் திசையெல்லாம் ஜொலிக்கும் விளம்பரங்கள் சொல்கின்றன. ஏழையோ பணக்காரனோ இந்த மனோபாவத்திலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள். இவற்றை அனுபவிப்பதற்கு எதையும் செய்யலாம் என்ற எண்ணமும் இந்த அனுப வத்தைத் தமக்கு வழங்க முன்வருபவரை ஏற்றுக்கொள்வதுதான் வாழ வழி என்ற எண்ணமும் இவர்களை ஆட்கொள்கின்றன. காமக்களியாட்டத்தையை நோக்க மாகக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள் கிறார்கள். ஏமாந்தபின் குற்றச்செயல்கள் வெடிக்கின்றன.லஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைக்கும் பெண்கள் சில நிகழ்வுகளில் எதிரியை மாய்க்கிறார்கள். அல்லது தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள்.


எப்படி நிகழ்ந் தாலும் பெண்களே பழிதூற்றப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள்தான் நாசப் படுத்தப்படுகின்றன. முள் மீது சேலை பட்டாலும் சேலை மீது முள் பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தானே! அவ்வளவு மென்மையான பெண்கள்தான் ஏச்சுக் கும் பேச்சுக்கும் ஆளாகிறார்கள்.முழுச் சுதந்திரம் பெறாமல், தங்களின் உரிமைகள் பற்றி அறியாமல், அறிந்தாலும் அவற்றை அனுபவிக்க முடியாமல் தத்தளிக்கும் நிலையிலேயே பெண்கள் இருக் கிறார்கள். இதனால்தான் கணவனைத் தவிர்த்து இன்னொரு ஆணுடன் பெண் ணுக்கு ஏற்படும் உறவைக் குற்றச் செயலாகக் கொண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் சட்டத்திருத்தத்தை தேசிய மகளிர் ஆணையமே எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இத்தகைய செயல்களைக் குடும்பப் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். சமூக, பொருளாதாரக் காரணங்களால் இதில் பாதிக்கப்படுகின்றவர்களாகவே பெண்கள் பார்க்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்களாகப் பார்க்கப்படக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது.


பெண்களுக்கு உடல் ரீதியாக வருத்தி தண்டனை தருவதற்கு சட்டமும், மன ரீதியாக வருத்தி தண்டனை தருவதற்கு ஊடகங்களும் முனைப்புக் காட்டுவதை நிறுத்த வேண்டும். குடும்பத்தில் மனம்விட்டுப் பேசும் ஜன நாயகத் தன்மையையும் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை மதிக்கும் மனப்பாங்கும் அவரவர் நன்கு சிந்தித்துத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொள்ள அனு மதிக்கும் உளப்பாங்கும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டால் கருத்து வேறுபாடுகள் கடுமையானால் அவரவர் பாதையில் பிரிந்து நடைபோட அனுமதிக்கும் துணிவும் நேர்மையும் பரவலாக்கப்பட வேண்டும். இது தறிகெட்டு ஓடும் காட்டாற்றுத் தன்மையதாய் இல்லாமல் வரம்புக் குள் நடந்து சென்று இயற்கைக்கு வளம் சேர்க்கும் நதிபோல் வாழ்க்கையைச் செம் மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

Monday, July 16, 2007

கருத்து

படைப்பாக்கப் பள்ளி
- ஒரு புதிய அர்த்தம்


சிந்தை ஜெயராமன்

படைப்பாக்கச் சிந்தனை என்பது ஒரு முக்கியமான ஆற்றலாகும்। நமது குழந்தைகளிடம் அளவின்றிக் காணப்படும் அந்த ஆற்றலிலின் பலன்களை அறுவடை செய்ய முயல்வதற்கு முன்னால், அது அவர்களிடம் செழித்து வளரச் செய்வது முக்கியம்।படைப்பபாற்றல் சார்ந்த சிந்தனை இல்லாமல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது வித்துக்கள் இல்லாத தோட்ட வளர்ப்பு போன்றது. அப்படிப்பட்ட தோட்டத்தில் மண் இருக்கும், தண்ணீர் இருக்கும், உரம் இருக்கும் ... ஆனால் புல் பூண்டு கூட இருக்காது. படைப்பாக்கச் சிந்தனை என்ற விதை ஊன்றப்பட்டிருக்குமானால், அந்த விதைகளுக்குத் துணையாக மண், தண்ணீர், உரம் போன்ற அம்சங்கள் அமையுமானால் அது ஒரு அழகிய, பயனுள்ள தோட்டமாகப் பரிணமிக்கும். அந்தப் படைப்பாற்றல் என்பது ஏதோ தானாக வருவதோ, தலையெழுத்தால் கிடைக்கப் பெறுவதோ அல்ல. அந்த ஆற்றலைக் கற்றுத்தர முடியும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் அதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தவும் முடியும். பள்ளிகளைப் பொறுத்தவரையில் மழலையர் வகுப்புகள் முதல், மேல்நிலை வகுப்புகள் வரையில் மாணவர்களி நெஞ்சங்களில் அந்த அடிப்படை ஆற்றலைப் பேணி வளர்க்க முடியும்.குழந்தைகள் தங்களது மனங்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் ஆக்கப்பூர்வ எண்ணங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் பயிற்சியளிக்கிற இடமாகப் பள்ளிகள் திகழ வேண்டும். ஒரு ஆரோக்கியமான, அறிவியல் பூர்வமான பள்ளி என்பது தேர்வுகள் சார்ந்த பாடத்திட்டங்களோடு நின்றுவிடாது. அதைத் தாண்டி, ஒவ்வொரு குழந்தையின் சுதந்திர மனதை ஊக்குவித்து, அதன் மூலம் அடிப்படையான அறிவையும் ஆதாரமான திறமைகளையும் வளர்க்கிற இடமாக அது செயல்பட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளின் தங்குதடையற்ற கற்பனைகளும், தனிப்பட்ட ஆற்றர்களும் இவற்றை விடவும் வல்லமை மிக்கவையாக இருக்க முடியும். கல்வி ஆய்வாளர் எட்வர்ட் டீ போனோ, குழந்தைகளின் மாறுபட்ட தன்மைகளை ஒருங்கிணைக்க முடியம் என்கிறார். அதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் படைப்பபாற்றலைப் பிரகாசிக்கச் செய்ய முடியும் என்கிறார் அவர்.அறிவுத்திறன் என்பது ஒரு காரின் குதிரைச் சக்தி போன்றது. ஒரு காருக்கு எவ்வளவுதான் குதிரைச்சக்தி இருந்தாலும், ஓட்டுநரின் திறமையைப் பொறுத்தே அது நன்றாக இயங்கிறது. அதே போலத்தான் எவ்வளவு அறிவுத்திறன் இருந்தாலும், படைப்பபாற்றல் தான் ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஆகவேதான் சிறந்த பள்ளிகள் தமது செயல்பாட்டுத்திட்டத்தில் படைப்பாற்றல் வளர்ப்பு என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.


அறிவுக் கூர்மையும் சிந்தனையும்அறிவும் சிந்தனையும் ஒன்றுதான் என பலர் நம்புகிறார்கள். அந்தத் தவறான நம்பிக்கை, கல்விக்களத்தில் இரண்டு விதமான விரும்பத் தகாத விளைகளை ஏற்படுத்தியது என்று சுட்டிக் காட்டுகிறார் எட்வர்ட் டீ போனோ. ஒன்று, உயர்மட்ட அறிவுக் கூர்மை உள்ள குழந்தைகள் நல்ல சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு பயீற்சி எதுவும் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அடுத்து, நல்ல அறிவுத்திறன் இல்லாத குழந்தைகளால் நல்ல சிந்தனையாளர்களாகவும் உருவாக மாட்டார்கள் எனக்கருதி, அவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்யப்படுகிறது.
படைப்பபாற்றலும் அறிவாற்றலும்உளடவியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிற ஒரு கருத்து, படைப்பாற்றல் உள்ள ஒரு மனிதர் அறிவுத்திறன் கொண்டவராகவும் இருப்பார், ஆனால் உயர்ந்த அறிவுத்திறன் என்பது படைப்பாற்றலுக்கான முன்நிபந்தனை அல்ல. இது உளவியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிற ஒரு கருத்தாகும். அறிவாற்றல் உள்ள ஒரு மனிதர் தனது மதிப்பீட்டில் பொருத்தமற்றதாகக் கருதும் அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு தனது இலக்குகளை அடைகிறார். அவரது அறிவார்ந்த மனம் ஒரு செயலூக்கமுள்ள தீர்வை நோக்கி அவரை இயக்கும், அதிலேயே கவனம் செலுத்தும். இதற்கு மாறாக படைப்பாற்றல் உள்ள மனம் -பொருத்தமானதோ, பொருத்தமற்றதோ- சாத்தியமான அனைத்துத் திக்குகளிலும் சுற்றிவருகிறது. அறிவார்ந்த மனம் முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்ட, எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது. படைப்பு மனமோ தனித்தன்மை மிக்கதாக, எதிர்பாராத நிகழ்வுகளுக்குத் தயாரானதாக இருக்கிறது.
திறனாய்வுச் சிந்தனைஆய்வாளர் எட்வர்ட் டீ போனோ தமது ‘திங்கிங் கோர்ஸ்’ (சிந்தனைப் போக்கு) என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: ‘‘நமது மனங்கள் சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கங்களால் நிரப்பப்பட்டுள்ளன. மேசை, புத்தகம், கடை, படிப்பு... என பல்வேறு சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கங்களால் நிரப்பப்பட்டுள்ளன. பாடநூல் பிரச்சனைகள் பொதுவாக மூடப்பட்ட வழிகளில் முடிந்துவிடுகின்றன. உண்மை வாழ்க்கையின் பிரச்சனைகளோ, மூடப்படாத வழிகளைக் கொண்டவையாகும். விமர்சனச் சிந்தனை என்றால் மதிப்பிடுதல் என்று பொருளாகும். அது ஒரு சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கமாகும்.’’பள்ளிக் கூடம் என்பது பொதுவாக, எதிர்வினை சார்ந்த சித்தரிப்புக் கருத்தாக்கம் கொண்ட இடமாகும். ஏனெனில், மாணவர்களின் முன்னால் எந்த ஒரு பொருளையும் வைத்து எதிர்வினையாற்றுமாறு கூறலாம். அந்தப் பொருளின் பெயர், வடிவம், நிறம் என்று தங்கள் மனங்களில் பதிந்துள்ள சித்தரிப்புகளின் அடிப்படையில் எதிர்வினையாற்றுவார்கள்.
ஆக்கப் பூர்வ சிந்தனைகாலங்காலமாக நாம் இத்தகைய எதிர்வினைச் சிந்தனை குறித்தே அக்கறை காட்டி வந்திருக்கிறோம். நம் முன்னால் என்ன வைக்கப்படுகிறதோ அதற்கேற்ப எதிர்வினையாற்றிவந்திருக்கிறோம். ஆனால் வேறொரு வகைச் சிந்தனையும் இருக்கிறது. நேர் வினையாற்றக்கூடிய அந்தச் சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே வந்து, செயல்படக் கூடியதாகும். நிகழ்வுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இதற்குத் தேவைப்படுவது ஆக்கப்பூர்வமான, விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சிந்தனை - சுருக்கமாகச் சொல்வதானால் படைப்பாற்றல் சிந்தனை.
படைப்ப்hக்கச்சிந்தனையின் பல்வேறு மட்டங்கள்உளவியல் ஆய்வாளர்கள் குழு ஒன்று பல் வேறு வயதுப் பிரிவினரிடையே இருக்கக் கூடிய படைப்பாக்கச் சிந்தனை தொடர்பாக ஒரு ஆய்யை மேற்கொண்டது. படைப்பாற்றல் என்பதற்கான அளவுகோலின் கீழ், 45 வயது நிரம்பியவர்களிடையே சுமார் 2 சதவீதம் பேர் படைப்பாற்றல் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. 44 வயதுப் பிரிவினர், 43 வயதுப் பிரிவினர் ஆகியோரிடையே நடத்தப்பட்ட ஆய்விலும் இதே எண்ணிக்கைதான் கிடைத்தது.இதே போன்ற ஒரு கணெக்கெடுப்பு குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்டபோது, அதிகமான குழந்தைகள் படைப்பாக்கச்சிந்தனையோடு கூடிய கற்பனை வளத்தோடு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக 5 வயதுக் குழந்தைகளிடையே 90 சதவீதம் பேர் கற்பனை வளத்தோடு இருக்கின்றனர் என அந்த ஆய்வு காட்டியது. ஆனால் 7 வயதுக் குழந்தைகளிடையே 10 சதவீதத்தினர் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தினர்.நம் கல்வி முறையில், வரையறுக்கப்பட்ட அறிவுக்குத்தான் அழுத்தம் தரப்படுகிறது. இது குழந்தைகள் வளர வளர அவர்களது கற்பனையையும் படைப்பாற்றலையும் ஒடுக்கிவிடக்கூடும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
நான்கு அடிப்படைகள்ஒருவரை எது படைப்பாற்றல் உள்ளவராக ஆக்குகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் நான்கு அடிப்படையான தன்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நான்கு தன்மைகளையும் எந்த ஒரு தனி மனிதரும் வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் ஆய்வாளர் ஜோஸப் ஜி. மேஸன். அந்த நான்கு அடிப்படைத் தன்மைகள் வருமாறு:1) பிரச்சனை பற்றிய உணர்வு2) பாய்ந்துவரும் எண்ணங்கள்3) சொந்தக் கற்பனை4) அனுசரிப்பு
பிரச்சனை உணர்வு:ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை உணரும் ஆற்றல் இது. நிகழ்வுகள் குறித்து தவறாகப் புரிந்து கொள்வது, தவறான கருத்துக்கு வருவது, போதுமான தகவல்களைச் சேகரிக்கத் தவறுவது, வேறு பல குறைபாடுகள் ஆகியவற்றைத் தாண்டி உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கான ஆற்றல் இது. குழந்தைகள் தங்களது படைப்பாக்கப் பூர்வமான முயற்சிகளுக்குத் தடையாக இத்தகைய பிரச்சனைகள் வருகிற போது, அவற்றைக் கண்டறியக் கற்றுக் கொள்வார்களானால், அந்தப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர்கள் பாதித் தொலைவு வந்துவிட்டார்கள் என்று அர்த்தம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.பாய்ந்து வரும் எண்ணங்கள்
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கக்கூடுமானால் அது ‘பாய்ந்து வரும் எண்ணங்கள்’ பிரிவைச் சேர்ந்ததாகும். இந்தத் திறமை பெரும்பாலும் அந்தந்தத் தனி மனிதர்களின் மனப்பாங்கையும் பயிற்சிகளையும் சார்ந்ததாகும். ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு தம்மை உணர்வுப் பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு இந்த அணுகுமுறையையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
சொந்தக் கற்பனைநடைமுறை வாழ்க்கையில், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில், முற்றிலும் புதிய அணுகுமுறை, சுத்தமான சொந்தக் கற்பனை ஆகியவை பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. வழிகாட்டல், ஆலோனைகள், முன்னனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு அவர்களாகவே தீர்வு காண முயல்கிறார்கள். புதிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். ஏற்கெனவே உள்ள ஒரு தீர்வை மேம்படுத்த முயல்கிறார்கள்.
அனுசரிப்புகுறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்குப் பல்வேறு கோணங்களில், பல்வேறு வழிகளில் தீர்வு காணமுடியும் ஏற்றுக் கொள்வதும் அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க முன்வருவதும் ‘அனுசரிப்பு’ தகுதியாகும். இது ஆகப் பெரும்பாலும் ஒருவருடைய மனப் போக்கு சம்பந்தமானதாகும். ஏற்கெனவே தெரிந்த ஒரு தீர்வு, வழிமுறை ஆகியவற்றோடு உறைந்துபோய்விடாமல், ஒரு வழிமுறை பலனளிக்கவில்லை என்றால் வேறொரு கோணத்தில் பிரச்சனையை அணுக முடியும் என்று கருதி அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்வது ஆக்கப் பூர்வ அனுசரிப்பு அணுகுமுறையாகும். இது ‘ஆக்கப்பூர்வ எதிர்பார்ப்பு’ என்ற இயல்புக்கும் இட்டுச் செல்கிறது. இந்த அணுகுமுறை உள்ளவர்கள், குறிப்பாகக் குழந்தைகள், ஒரு தோல் ஏற்படுமானால் அத்துடன் அதை அவர்கள் விட்டுவிடுவதில்லை. பிரச்சனை எப்படியாவது முடிவுக்கு வர வேண்டும் என்பதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கும்.
குழந்தைகளின் படைப்பாற்றல்குழந்தைகள் எப்போதுமே தங்களைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். புதிய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தங்களது படைப்புத் திறனை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்த வரையில் அந்தத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக, படைப்பாக்கத் திறன் உள்ள ஆசிரியர் தேவை. படைப்புத் திறன் என்பது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்க வேண்டும் என்பதில்லை. படைப்புத் திறன் உள்ள ஒரு குழந்தை வாரக் கணக்கில் எந்த ஒரு புதிய கற்பனையும் தோன்றாமல் இருக்கலாம். திடீரென்று ஒரு நாள், தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வின் அடிப்படையில் அக்குழந்தையின் மனதில் ஒரு கற்பனை தூண்டிவிடப்படலாம். அதைத் தொடர்ந்து அக்குழந்தையின் படைப்பாக்கத் திறன் வேகமான வளர்ச்சியைம்.
ஆசிரியரின் படைப்பாற்றல்பள்ளியில் குழந்தைகளுக்குத் தேவையான படைப்பாக்கச் சூழலை திடுதிப்பென இரவோடு இரவாக உருவாக்கிவிட முடியாது. ஆனால் ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம்: படைப்புத்திறனுக்கான முனைப்பு என்பது ஆசிரியரிடமிருந்தே வரவேண்டும். ஒரு ஆசிரியரின் மனப்பாங்கு, தனித்தன்மை, ஊக்குவிக்கும் உள்ளம் ஆகியவை எந்த அளவுக்கு புதிய கர்பனைகளையும், முயற்சிகளையும் வரவேற்று ஆதரிக்கக்கூடியவையாக இருக்கின்றனவோ அந்த அளவிற்குக் குழந்தைகளின் படைப்பாற்றல் பள்கிப் பெருகும். ஏற்கெனவே வரவேற்கப்பட்ட பாடத்திட்டத்திற்கும் மட்டும் நின்றுவிடாமல் அதற்கும் அப்பால் குழந்தைகளின் சுய முனைப்புகளை இனங்கண்டு பட்டைதீட்டி தூண்டிவிடுபவராக ஒரு ஆசிரியர் அமைந்துவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதைவிட அருமையான சூழல் வேரெதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள படைப்புத்திறன் மென்மேலும் ஒளிர்வது ஒவ்வொரு பள்ளியின் தன்மையையும் சூழலையும் பொறுத்தே அமைகிறது. எனவே சரியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி குழந்தைகளின் படைப்புச் செயல்பாடுகளை ஊக்குவித்து வாழிகாட்டுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் அடிப்படை கடமையாகிறது. குழந்தைகளின் இலக்குகள், செயல் முனைப்புகள், புதிய கற்பனைகள் ஆகியவை படைப்புத்திறன் உள்ள ஆசிரியரால் மென்மேலும் செழுமையடைகின்றன. குழந்தைகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் ஒரு ஆசிரியரிடம் பதில்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய தருணங்களில், குழந்தைகளையே விடைத்தேட வைப்பதும் விளக்கம் அளிக்க வைப்பதும் மிகுந்த பலனைத்தரும். குழந்தைகள் தவறான பதிலைக்கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் சுயமாக யோசிப்பதற்கும் தங்களது சொந்தக் கற்பனையிலிருந்து விளக்கம் கூறுவதற்கும் வாய்ப்பளிக்கப்படுவது அவர்களது படைப்பாற்றல் திறனுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.பள்ளிக்குள் படைப்பாக்க வீழ்ச்சி ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இத்தகைய படைப்பாக்கச் சூழல் படிப்படியாக அரிக்கப்பட்டு வருவது, கல்வியாளர்களுக்கு கவலை தரும் அம்சமாகும். இதற்குக் காரணமாக பின்வரும் நிலைமைகளைச் சுட்டிக்காட்டலாம்:1. பள்ளி நிர்வாகத்தின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கை2. ஆசிரியர் தான் மட்டுமே பேசுபவராக இருப்பது3. குழந்தைகள் மனம் திறந்த விவாதத்திற்கு இடமளிக்கப்படாதது4. வரையறுக்கப்பட்ட சித்தரிப்பு வழிமுறைகளை மட்டுமே ஆசிரியர் கடைப்பிடிப்பதுநல்லாசிரியர் ஒரு நல்லாசிரியரை தேர்ந்தெடுப்பதற்கும் விருது அளிப்பதற்கும் பல்வேறு அடிப்படை விதிகள் உள்ளன.அது ஒரு புறம் இருக்க, என்னைப் பொறுத்தவரை பின்வரும் தகுதிகள் உள்ளவரையே நல்லாசிரியராக அங்கீகரிக்க விரும்புகிறேன்: 1. இறுக்கமாக இல்லாமல் இளக்கமாகவும் குழந்தைகளின் செயல்பாடுகளில் மனம் வியந்து போகிறவராகவும் இருக்க வேண்டும்.2. குழந்தைகளின் சிறு சிறு சாதனைகளைக் கண்டு பெருமை கொள்பவராக இருக்க வேண்டும்.3. தன்னுடைய சொந்த கற்பனையையும் படைப்புத்திறனையும் கூர் தீட்டிக்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.4. குழந்தைகளின் தவறுகளைக் குத்திக்காட்டாமல், பக்குவமாக சுட்டிக்காட்டி அவர்களே திருத்திக் கொள்ள வழிவகுக்க வேண்டும்.5. குழந்தைகளை மனப்பூர்வமாகப் பாராட்டுபவராக இருக்க வேண்டும்.6. குழந்தைகள் கூறுவதை செவி கொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும்.நிறைவாக...ஒவ்வொரு பள்ளியின் அடிப்படைத் தகுதியாக படைப்பாக்கச் சிந்தனை விதைக்கப்பட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரும் நூற்றாண்டுகளிலும் சரி - அறிந்திடக் கற்பது, செயல் புரிந்திடக் கற்பது, முனைப்புடன் இருந்திடக் கற்பது, மற்றவரோடு இணைந்து வாழ்ந்திடக் கற்பது ஆகிய - கல்வியின் நான்கு ஆதாரத் தூண்களுக்கு அடிவாரமாக படைப்புத்திறனை இருந்திட வேண்டும். முன்னரே சொன்னதுபோல் குழந்தைகள் நுட்பமான உணர்வு கொண்டவர்கள், சுயமான கற்பனைக் கொண்டவர்கள், அனுசரிப்பு மனநிலை கொண்டவர்கள் பல வண்ணப் பூக்கள்போல மலர்ந்து வரும் அவர்களது இயற்கையான படைப்பு மணத்தை மேலும் மேலும் இனிமையாக்குக்கிற தோட்டமாக பள்ளி வளாகம் பரிணமிக்க வேண்டும். தோட்டத்தின் மண்ணையும், பயிர்களையும், பூக்களையும் நேசிக்கிற தோட்டக்காரர்களாக ஆசிரியர்கள் பரிணமிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்கால வெற்றிக்கு மட்டுமல்ல, நாட்டின் - சமுதாயத்தின் எதிர்கால வெற்றிக்கும் இதுவே வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். ஆதாரங்கள்:1. டேல் டிம்பே எழுதிய `கிரியேட்டிவிட்டி' 2. எட்டுவர்ட் டீ போனோ எழுதிய `லேட்டரல் திங்க்கிங்'3. யுனெஸ்கோ வெளியீடாகிய `லேர்னிங் டு லிவ் டுகெதர்-ஹேவ் வீ ஃபெயில்டு?'