Friday, July 20, 2007

கள்ளக் காதலும் பெண்ணுரிமையும்


ஸ்நேகா


பெண்களின் கள்ளக்காதல்பற்றி எழுதாத பத்திரிகை கள் மிகக் குறைவு. கணவன்-மனைவி இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டு இன்னொரு ஆணுடன் பெண் உறவு வைத்துக் கொள்வதைத்தான் கள்ளக்காதல் என்று பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. இதுபோன்ற செய்திகள் கிடைத்தால் அதை எழுதுபவர் கற்பனையில் மிதப்பார். அந்த சமயத்தில் அவர் தன் னையே ஒரு பெண்ணாக உருவகித்துக்கொண்டு எழுதுகிற வர்ணனை வக்கிரத்தின் உச்சிக்கே போய்விடும். அந்தப் பெண் ணுக்குக் கணவன் மீது ஏன் வெறுப்பு வந்தது என்ற காரணத் தைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் மிக எளிதாக இன்னொரு ஆணிடம் ஏன் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பற்றி சுவாரசியமாக எழுதுவார். அந்த எழுத்துக்கள் பெரும்பாலும் உடல் சார்ந்ததாக வும் ஆண்-பெண் உறவு சார்ந்ததாகவும் இருக்கும்.


இந்த சமுதாயத்தின் சரிபாதியாக இருக்கிற பெண்ணி னத்தை இழிவுபடுத்துவதான எண்ணமோ, பெண்ணும் ஜீவ னுள்ள உணர்ச்சிகள் பெற்ற மனுஷிதான் என்ற நினைவோ அந்த எழுத்துக்களில் எள்முனையளவும் இருக்காது. மாறாக “காலம் கெட்டுப்போச்சு”, “பொம்பளைங்க ராச்சியமாயிடுச்சி”, “இந்த லெட்சணத்துல இவங்களுக்கு இன்னும் உரிமை வேணு மாம்”, “பொம்பளைங்கள வைக்க வேண்டிய இடத்துல வைக்க ணும்”... என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான பழம் பஞ்சாங்க சிந்தனைகளை மீண்டும் கிளறிவிடக் கூடிய கோல்களாகவே இவர்களின் எழுதுகோல்கள் பயன்படும்.


பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்துவிடும் கொலைக் குற்றங்களுக்கோ இன்னபிற குற்றச்செயல்களுக்கோ கள்ளக் காதல் முத்திரை குத்தி வழக்குப் பதிவு செய்துவிட்டால் எதிர்க் கேள்வி இல்லாமல் எல்லோரும் காவல்துறையின் நிலையையே ஆதரித்து விடுவார்கள் என்கிற ஆணித்தரமான நம்பிக்கை விசாரணை அதிகாரிகளுக்கும் இருக்கிறது.பெண்ணுரிமைகளுக்காக ஏராளமான சட்டங்கள் ஏடுகளில் இருக்கின்றன.


ஆனால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்கிற கேள்வி ஞானமோ கல்வி ஞானமோ பெண்களுக்கு இருக் கிறதா? இவை அவர்களுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டிருக் கிறதா? பெண்கள் அழுதழுதே சாகின்ற அல்லது உறவுகளுக் காக ஏங்கி ஏங்கித் தேய்ந்து போகிற மெகா தொடர்களைத் தயாரித்துப் பணம் பண்ணுகிறவர்கள் அதில் ஒரு சதவீதத்தை யாவது பெண்ணுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செலவு செய்கிறார்களா?ஒரு பெண்ணுக்குத் திருமணமானபின் அவளது உடல் கணவனின் நுகர்வுப் பண்டமாகி விடுகிறது. அவன் விரும்பும் போதெல்லாம் அதை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் மனைவி என்கிற அந்த மனுஷியின் விருப்பம் அறியப்பட வேண் டிய அவசியமில்லை.


உடலுறவைப் பொறுத்தவரை பெண்ணின் விருப்பமின்றி கணவனே புணர்ந்தாலும் அதைக் கற்பழிப்பு என்கிறது சட்டம். என்ன பயன்? தனது விருப்பத்தைத் தெரி வித்து இப்போது வேண்டாம் என்று எத்தனை பெண்கள் சொல்லிவிட முடியும்? அப்படியே சொல்லிவிட்டால் அதனைக் குத்தலாக நினைக்காமல் சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல் எத்தனை ஆண்கள் இயல்பாக எடுத்துக்கொள்வார்கள்? இயல்பாக உள்ள ஆண்களின் மனநிலையே இப்படி இருக்கும் என் றால் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி சொல்லவே வேண் டாம். இழிமொழியும் ஏச்சும் பேச்சும் சகிக்க முடியாததாகி எதை யும் சகித்துக்கொள்பவளாகப் பெண் ஆகிப்போவாள்.


கணவன் என்று நிச்சயமாகி தாலி கட்டிக் கொள்ள கழுத்தை நீட்டிவிட்ட பின் அவன் என்ன செய்தாலும் சகித்துக்கொண்டு காலம் பூராவும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் பெண்ணுக்கு வாழா வெட்டி, அடங்காப்பிடாரி என்ற புனைப் பெயர் கள் சூட்டப்படும். புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண் கணவனைப் பிடிக்கவில்லையென்று பிறந்த வீட்டுக்கு வந்துவிட முடியாது. பெற்றோர்கள் குடும்ப கவுரவம் பார்ப்பார்கள். திருமணமாகாத தங்கையோ தம்பியோ வீட்டில் இருந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் எனப் புலம்புவார்கள். `செத்தாலும் கட்டியவன் காலடியிலேயே செத்துப்போ’ என்பதுதான் பெற்று வளர்த்தவர்களின் அறி வுரையாக இருக்கும்.


இத்தனையையும் மீறி ஒரு பெண் எப்படி தனது விருப்பத்தை உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும்?தன்னை மணந்தவரோடு இணக்கமாக வாழ முடியாத சூழலில் அவரை விவாகரத்து செய்துவிடும் துணிவோ நேர்மையோ இல் லாமல் ஒப்புக்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது சிறை. அதற்குள் சென்றுவிட்டால் விடுதலை என்பதையே நினைத்துப்பார்க்காத ஆயுள் தண்டனைதான்.


இது ஒரு பக்கம். மறு பக்கம் இளம் வயதில் தாம் விரும்பிய, காத லித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள முடியாமல் தடைகள். சாதி மதத்தடைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு தடைகள். ஒருபக்கம் உறவினர்களை உதறித் தள்ளி விட்டு வாழத்துணிவின்மை; மறுபக்கம் கனவு கள் கலைந்து மனதார விரும்பியவர் கிடைக் காததால் ஏற்படும் தவிப்பு. கயிறிழுப்புப் போட்டிபோல் இரு பக்கமும் இழுபடும் மனோ பாவம்.


இதெல்லாம் சில சயமம் சில பெண் களை நேர்மையுள்ளவர்களாக இருக்கவிடுவ தில்லை.சமூக பொருளாதாரச் சூழலும் பெண்களை சாதிச் சூழலில் இழுத்துக் கொள் கிறது. வாழ்க்கை என்பதே உற்பத்திப் பொருள்களை அனுபவிப்பதற்காகத்தான் என்று திரும்பும் திசையெல்லாம் ஜொலிக்கும் விளம்பரங்கள் சொல்கின்றன. ஏழையோ பணக்காரனோ இந்த மனோபாவத்திலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள். இவற்றை அனுபவிப்பதற்கு எதையும் செய்யலாம் என்ற எண்ணமும் இந்த அனுப வத்தைத் தமக்கு வழங்க முன்வருபவரை ஏற்றுக்கொள்வதுதான் வாழ வழி என்ற எண்ணமும் இவர்களை ஆட்கொள்கின்றன. காமக்களியாட்டத்தையை நோக்க மாகக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள் கிறார்கள். ஏமாந்தபின் குற்றச்செயல்கள் வெடிக்கின்றன.லஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைக்கும் பெண்கள் சில நிகழ்வுகளில் எதிரியை மாய்க்கிறார்கள். அல்லது தங்களையே மாய்த்துக்கொள்கிறார்கள்.


எப்படி நிகழ்ந் தாலும் பெண்களே பழிதூற்றப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள்தான் நாசப் படுத்தப்படுகின்றன. முள் மீது சேலை பட்டாலும் சேலை மீது முள் பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தானே! அவ்வளவு மென்மையான பெண்கள்தான் ஏச்சுக் கும் பேச்சுக்கும் ஆளாகிறார்கள்.முழுச் சுதந்திரம் பெறாமல், தங்களின் உரிமைகள் பற்றி அறியாமல், அறிந்தாலும் அவற்றை அனுபவிக்க முடியாமல் தத்தளிக்கும் நிலையிலேயே பெண்கள் இருக் கிறார்கள். இதனால்தான் கணவனைத் தவிர்த்து இன்னொரு ஆணுடன் பெண் ணுக்கு ஏற்படும் உறவைக் குற்றச் செயலாகக் கொண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் சட்டத்திருத்தத்தை தேசிய மகளிர் ஆணையமே எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இத்தகைய செயல்களைக் குடும்பப் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். சமூக, பொருளாதாரக் காரணங்களால் இதில் பாதிக்கப்படுகின்றவர்களாகவே பெண்கள் பார்க்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்களாகப் பார்க்கப்படக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது.


பெண்களுக்கு உடல் ரீதியாக வருத்தி தண்டனை தருவதற்கு சட்டமும், மன ரீதியாக வருத்தி தண்டனை தருவதற்கு ஊடகங்களும் முனைப்புக் காட்டுவதை நிறுத்த வேண்டும். குடும்பத்தில் மனம்விட்டுப் பேசும் ஜன நாயகத் தன்மையையும் ஒருவர் மற்றவரின் உணர்வுகளை மதிக்கும் மனப்பாங்கும் அவரவர் நன்கு சிந்தித்துத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொள்ள அனு மதிக்கும் உளப்பாங்கும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டால் கருத்து வேறுபாடுகள் கடுமையானால் அவரவர் பாதையில் பிரிந்து நடைபோட அனுமதிக்கும் துணிவும் நேர்மையும் பரவலாக்கப்பட வேண்டும். இது தறிகெட்டு ஓடும் காட்டாற்றுத் தன்மையதாய் இல்லாமல் வரம்புக் குள் நடந்து சென்று இயற்கைக்கு வளம் சேர்க்கும் நதிபோல் வாழ்க்கையைச் செம் மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

No comments: