Monday, July 16, 2007

கருத்து

படைப்பாக்கப் பள்ளி
- ஒரு புதிய அர்த்தம்


சிந்தை ஜெயராமன்

படைப்பாக்கச் சிந்தனை என்பது ஒரு முக்கியமான ஆற்றலாகும்। நமது குழந்தைகளிடம் அளவின்றிக் காணப்படும் அந்த ஆற்றலிலின் பலன்களை அறுவடை செய்ய முயல்வதற்கு முன்னால், அது அவர்களிடம் செழித்து வளரச் செய்வது முக்கியம்।படைப்பபாற்றல் சார்ந்த சிந்தனை இல்லாமல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது வித்துக்கள் இல்லாத தோட்ட வளர்ப்பு போன்றது. அப்படிப்பட்ட தோட்டத்தில் மண் இருக்கும், தண்ணீர் இருக்கும், உரம் இருக்கும் ... ஆனால் புல் பூண்டு கூட இருக்காது. படைப்பாக்கச் சிந்தனை என்ற விதை ஊன்றப்பட்டிருக்குமானால், அந்த விதைகளுக்குத் துணையாக மண், தண்ணீர், உரம் போன்ற அம்சங்கள் அமையுமானால் அது ஒரு அழகிய, பயனுள்ள தோட்டமாகப் பரிணமிக்கும். அந்தப் படைப்பாற்றல் என்பது ஏதோ தானாக வருவதோ, தலையெழுத்தால் கிடைக்கப் பெறுவதோ அல்ல. அந்த ஆற்றலைக் கற்றுத்தர முடியும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் அதனை வெற்றிகரமாகப் பயன்படுத்தவும் முடியும். பள்ளிகளைப் பொறுத்தவரையில் மழலையர் வகுப்புகள் முதல், மேல்நிலை வகுப்புகள் வரையில் மாணவர்களி நெஞ்சங்களில் அந்த அடிப்படை ஆற்றலைப் பேணி வளர்க்க முடியும்.குழந்தைகள் தங்களது மனங்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் ஆக்கப்பூர்வ எண்ணங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் பயிற்சியளிக்கிற இடமாகப் பள்ளிகள் திகழ வேண்டும். ஒரு ஆரோக்கியமான, அறிவியல் பூர்வமான பள்ளி என்பது தேர்வுகள் சார்ந்த பாடத்திட்டங்களோடு நின்றுவிடாது. அதைத் தாண்டி, ஒவ்வொரு குழந்தையின் சுதந்திர மனதை ஊக்குவித்து, அதன் மூலம் அடிப்படையான அறிவையும் ஆதாரமான திறமைகளையும் வளர்க்கிற இடமாக அது செயல்பட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளின் தங்குதடையற்ற கற்பனைகளும், தனிப்பட்ட ஆற்றர்களும் இவற்றை விடவும் வல்லமை மிக்கவையாக இருக்க முடியும். கல்வி ஆய்வாளர் எட்வர்ட் டீ போனோ, குழந்தைகளின் மாறுபட்ட தன்மைகளை ஒருங்கிணைக்க முடியம் என்கிறார். அதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் படைப்பபாற்றலைப் பிரகாசிக்கச் செய்ய முடியும் என்கிறார் அவர்.அறிவுத்திறன் என்பது ஒரு காரின் குதிரைச் சக்தி போன்றது. ஒரு காருக்கு எவ்வளவுதான் குதிரைச்சக்தி இருந்தாலும், ஓட்டுநரின் திறமையைப் பொறுத்தே அது நன்றாக இயங்கிறது. அதே போலத்தான் எவ்வளவு அறிவுத்திறன் இருந்தாலும், படைப்பபாற்றல் தான் ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஆகவேதான் சிறந்த பள்ளிகள் தமது செயல்பாட்டுத்திட்டத்தில் படைப்பாற்றல் வளர்ப்பு என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.


அறிவுக் கூர்மையும் சிந்தனையும்அறிவும் சிந்தனையும் ஒன்றுதான் என பலர் நம்புகிறார்கள். அந்தத் தவறான நம்பிக்கை, கல்விக்களத்தில் இரண்டு விதமான விரும்பத் தகாத விளைகளை ஏற்படுத்தியது என்று சுட்டிக் காட்டுகிறார் எட்வர்ட் டீ போனோ. ஒன்று, உயர்மட்ட அறிவுக் கூர்மை உள்ள குழந்தைகள் நல்ல சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு பயீற்சி எதுவும் தேவையில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அடுத்து, நல்ல அறிவுத்திறன் இல்லாத குழந்தைகளால் நல்ல சிந்தனையாளர்களாகவும் உருவாக மாட்டார்கள் எனக்கருதி, அவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்யப்படுகிறது.
படைப்பபாற்றலும் அறிவாற்றலும்உளடவியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிற ஒரு கருத்து, படைப்பாற்றல் உள்ள ஒரு மனிதர் அறிவுத்திறன் கொண்டவராகவும் இருப்பார், ஆனால் உயர்ந்த அறிவுத்திறன் என்பது படைப்பாற்றலுக்கான முன்நிபந்தனை அல்ல. இது உளவியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிற ஒரு கருத்தாகும். அறிவாற்றல் உள்ள ஒரு மனிதர் தனது மதிப்பீட்டில் பொருத்தமற்றதாகக் கருதும் அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு தனது இலக்குகளை அடைகிறார். அவரது அறிவார்ந்த மனம் ஒரு செயலூக்கமுள்ள தீர்வை நோக்கி அவரை இயக்கும், அதிலேயே கவனம் செலுத்தும். இதற்கு மாறாக படைப்பாற்றல் உள்ள மனம் -பொருத்தமானதோ, பொருத்தமற்றதோ- சாத்தியமான அனைத்துத் திக்குகளிலும் சுற்றிவருகிறது. அறிவார்ந்த மனம் முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்ட, எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது. படைப்பு மனமோ தனித்தன்மை மிக்கதாக, எதிர்பாராத நிகழ்வுகளுக்குத் தயாரானதாக இருக்கிறது.
திறனாய்வுச் சிந்தனைஆய்வாளர் எட்வர்ட் டீ போனோ தமது ‘திங்கிங் கோர்ஸ்’ (சிந்தனைப் போக்கு) என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: ‘‘நமது மனங்கள் சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கங்களால் நிரப்பப்பட்டுள்ளன. மேசை, புத்தகம், கடை, படிப்பு... என பல்வேறு சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கங்களால் நிரப்பப்பட்டுள்ளன. பாடநூல் பிரச்சனைகள் பொதுவாக மூடப்பட்ட வழிகளில் முடிந்துவிடுகின்றன. உண்மை வாழ்க்கையின் பிரச்சனைகளோ, மூடப்படாத வழிகளைக் கொண்டவையாகும். விமர்சனச் சிந்தனை என்றால் மதிப்பிடுதல் என்று பொருளாகும். அது ஒரு சித்தரிக்கப்பட்ட கருத்தாக்கமாகும்.’’பள்ளிக் கூடம் என்பது பொதுவாக, எதிர்வினை சார்ந்த சித்தரிப்புக் கருத்தாக்கம் கொண்ட இடமாகும். ஏனெனில், மாணவர்களின் முன்னால் எந்த ஒரு பொருளையும் வைத்து எதிர்வினையாற்றுமாறு கூறலாம். அந்தப் பொருளின் பெயர், வடிவம், நிறம் என்று தங்கள் மனங்களில் பதிந்துள்ள சித்தரிப்புகளின் அடிப்படையில் எதிர்வினையாற்றுவார்கள்.
ஆக்கப் பூர்வ சிந்தனைகாலங்காலமாக நாம் இத்தகைய எதிர்வினைச் சிந்தனை குறித்தே அக்கறை காட்டி வந்திருக்கிறோம். நம் முன்னால் என்ன வைக்கப்படுகிறதோ அதற்கேற்ப எதிர்வினையாற்றிவந்திருக்கிறோம். ஆனால் வேறொரு வகைச் சிந்தனையும் இருக்கிறது. நேர் வினையாற்றக்கூடிய அந்தச் சிந்தனை வட்டத்திலிருந்து வெளியே வந்து, செயல்படக் கூடியதாகும். நிகழ்வுகளை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இதற்குத் தேவைப்படுவது ஆக்கப்பூர்வமான, விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சிந்தனை - சுருக்கமாகச் சொல்வதானால் படைப்பாற்றல் சிந்தனை.
படைப்ப்hக்கச்சிந்தனையின் பல்வேறு மட்டங்கள்உளவியல் ஆய்வாளர்கள் குழு ஒன்று பல் வேறு வயதுப் பிரிவினரிடையே இருக்கக் கூடிய படைப்பாக்கச் சிந்தனை தொடர்பாக ஒரு ஆய்யை மேற்கொண்டது. படைப்பாற்றல் என்பதற்கான அளவுகோலின் கீழ், 45 வயது நிரம்பியவர்களிடையே சுமார் 2 சதவீதம் பேர் படைப்பாற்றல் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. 44 வயதுப் பிரிவினர், 43 வயதுப் பிரிவினர் ஆகியோரிடையே நடத்தப்பட்ட ஆய்விலும் இதே எண்ணிக்கைதான் கிடைத்தது.இதே போன்ற ஒரு கணெக்கெடுப்பு குழந்தைகளிடையே மேற்கொள்ளப்பட்டபோது, அதிகமான குழந்தைகள் படைப்பாக்கச்சிந்தனையோடு கூடிய கற்பனை வளத்தோடு இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக 5 வயதுக் குழந்தைகளிடையே 90 சதவீதம் பேர் கற்பனை வளத்தோடு இருக்கின்றனர் என அந்த ஆய்வு காட்டியது. ஆனால் 7 வயதுக் குழந்தைகளிடையே 10 சதவீதத்தினர் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தினர்.நம் கல்வி முறையில், வரையறுக்கப்பட்ட அறிவுக்குத்தான் அழுத்தம் தரப்படுகிறது. இது குழந்தைகள் வளர வளர அவர்களது கற்பனையையும் படைப்பாற்றலையும் ஒடுக்கிவிடக்கூடும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
நான்கு அடிப்படைகள்ஒருவரை எது படைப்பாற்றல் உள்ளவராக ஆக்குகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் நான்கு அடிப்படையான தன்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நான்கு தன்மைகளையும் எந்த ஒரு தனி மனிதரும் வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் ஆய்வாளர் ஜோஸப் ஜி. மேஸன். அந்த நான்கு அடிப்படைத் தன்மைகள் வருமாறு:1) பிரச்சனை பற்றிய உணர்வு2) பாய்ந்துவரும் எண்ணங்கள்3) சொந்தக் கற்பனை4) அனுசரிப்பு
பிரச்சனை உணர்வு:ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை உணரும் ஆற்றல் இது. நிகழ்வுகள் குறித்து தவறாகப் புரிந்து கொள்வது, தவறான கருத்துக்கு வருவது, போதுமான தகவல்களைச் சேகரிக்கத் தவறுவது, வேறு பல குறைபாடுகள் ஆகியவற்றைத் தாண்டி உண்மையான பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கான ஆற்றல் இது. குழந்தைகள் தங்களது படைப்பாக்கப் பூர்வமான முயற்சிகளுக்குத் தடையாக இத்தகைய பிரச்சனைகள் வருகிற போது, அவற்றைக் கண்டறியக் கற்றுக் கொள்வார்களானால், அந்தப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர்கள் பாதித் தொலைவு வந்துவிட்டார்கள் என்று அர்த்தம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.பாய்ந்து வரும் எண்ணங்கள்
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கக்கூடுமானால் அது ‘பாய்ந்து வரும் எண்ணங்கள்’ பிரிவைச் சேர்ந்ததாகும். இந்தத் திறமை பெரும்பாலும் அந்தந்தத் தனி மனிதர்களின் மனப்பாங்கையும் பயிற்சிகளையும் சார்ந்ததாகும். ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு தம்மை உணர்வுப் பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு இந்த அணுகுமுறையையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
சொந்தக் கற்பனைநடைமுறை வாழ்க்கையில், பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில், முற்றிலும் புதிய அணுகுமுறை, சுத்தமான சொந்தக் கற்பனை ஆகியவை பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. வழிகாட்டல், ஆலோனைகள், முன்னனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு அவர்களாகவே தீர்வு காண முயல்கிறார்கள். புதிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். ஏற்கெனவே உள்ள ஒரு தீர்வை மேம்படுத்த முயல்கிறார்கள்.
அனுசரிப்புகுறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்குப் பல்வேறு கோணங்களில், பல்வேறு வழிகளில் தீர்வு காணமுடியும் ஏற்றுக் கொள்வதும் அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க முன்வருவதும் ‘அனுசரிப்பு’ தகுதியாகும். இது ஆகப் பெரும்பாலும் ஒருவருடைய மனப் போக்கு சம்பந்தமானதாகும். ஏற்கெனவே தெரிந்த ஒரு தீர்வு, வழிமுறை ஆகியவற்றோடு உறைந்துபோய்விடாமல், ஒரு வழிமுறை பலனளிக்கவில்லை என்றால் வேறொரு கோணத்தில் பிரச்சனையை அணுக முடியும் என்று கருதி அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்வது ஆக்கப் பூர்வ அனுசரிப்பு அணுகுமுறையாகும். இது ‘ஆக்கப்பூர்வ எதிர்பார்ப்பு’ என்ற இயல்புக்கும் இட்டுச் செல்கிறது. இந்த அணுகுமுறை உள்ளவர்கள், குறிப்பாகக் குழந்தைகள், ஒரு தோல் ஏற்படுமானால் அத்துடன் அதை அவர்கள் விட்டுவிடுவதில்லை. பிரச்சனை எப்படியாவது முடிவுக்கு வர வேண்டும் என்பதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக இருக்கும்.
குழந்தைகளின் படைப்பாற்றல்குழந்தைகள் எப்போதுமே தங்களைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். புதிய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தங்களது படைப்புத் திறனை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். பள்ளிக் குழந்தைகளைப் பொறுத்த வரையில் அந்தத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக, படைப்பாக்கத் திறன் உள்ள ஆசிரியர் தேவை. படைப்புத் திறன் என்பது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்க வேண்டும் என்பதில்லை. படைப்புத் திறன் உள்ள ஒரு குழந்தை வாரக் கணக்கில் எந்த ஒரு புதிய கற்பனையும் தோன்றாமல் இருக்கலாம். திடீரென்று ஒரு நாள், தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வின் அடிப்படையில் அக்குழந்தையின் மனதில் ஒரு கற்பனை தூண்டிவிடப்படலாம். அதைத் தொடர்ந்து அக்குழந்தையின் படைப்பாக்கத் திறன் வேகமான வளர்ச்சியைம்.
ஆசிரியரின் படைப்பாற்றல்பள்ளியில் குழந்தைகளுக்குத் தேவையான படைப்பாக்கச் சூழலை திடுதிப்பென இரவோடு இரவாக உருவாக்கிவிட முடியாது. ஆனால் ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம்: படைப்புத்திறனுக்கான முனைப்பு என்பது ஆசிரியரிடமிருந்தே வரவேண்டும். ஒரு ஆசிரியரின் மனப்பாங்கு, தனித்தன்மை, ஊக்குவிக்கும் உள்ளம் ஆகியவை எந்த அளவுக்கு புதிய கர்பனைகளையும், முயற்சிகளையும் வரவேற்று ஆதரிக்கக்கூடியவையாக இருக்கின்றனவோ அந்த அளவிற்குக் குழந்தைகளின் படைப்பாற்றல் பள்கிப் பெருகும். ஏற்கெனவே வரவேற்கப்பட்ட பாடத்திட்டத்திற்கும் மட்டும் நின்றுவிடாமல் அதற்கும் அப்பால் குழந்தைகளின் சுய முனைப்புகளை இனங்கண்டு பட்டைதீட்டி தூண்டிவிடுபவராக ஒரு ஆசிரியர் அமைந்துவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதைவிட அருமையான சூழல் வேரெதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள படைப்புத்திறன் மென்மேலும் ஒளிர்வது ஒவ்வொரு பள்ளியின் தன்மையையும் சூழலையும் பொறுத்தே அமைகிறது. எனவே சரியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி குழந்தைகளின் படைப்புச் செயல்பாடுகளை ஊக்குவித்து வாழிகாட்டுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் அடிப்படை கடமையாகிறது. குழந்தைகளின் இலக்குகள், செயல் முனைப்புகள், புதிய கற்பனைகள் ஆகியவை படைப்புத்திறன் உள்ள ஆசிரியரால் மென்மேலும் செழுமையடைகின்றன. குழந்தைகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் ஒரு ஆசிரியரிடம் பதில்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய தருணங்களில், குழந்தைகளையே விடைத்தேட வைப்பதும் விளக்கம் அளிக்க வைப்பதும் மிகுந்த பலனைத்தரும். குழந்தைகள் தவறான பதிலைக்கூட சொல்லலாம் ஆனால் அவர்கள் சுயமாக யோசிப்பதற்கும் தங்களது சொந்தக் கற்பனையிலிருந்து விளக்கம் கூறுவதற்கும் வாய்ப்பளிக்கப்படுவது அவர்களது படைப்பாற்றல் திறனுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.பள்ளிக்குள் படைப்பாக்க வீழ்ச்சி ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இத்தகைய படைப்பாக்கச் சூழல் படிப்படியாக அரிக்கப்பட்டு வருவது, கல்வியாளர்களுக்கு கவலை தரும் அம்சமாகும். இதற்குக் காரணமாக பின்வரும் நிலைமைகளைச் சுட்டிக்காட்டலாம்:1. பள்ளி நிர்வாகத்தின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய கொள்கை2. ஆசிரியர் தான் மட்டுமே பேசுபவராக இருப்பது3. குழந்தைகள் மனம் திறந்த விவாதத்திற்கு இடமளிக்கப்படாதது4. வரையறுக்கப்பட்ட சித்தரிப்பு வழிமுறைகளை மட்டுமே ஆசிரியர் கடைப்பிடிப்பதுநல்லாசிரியர் ஒரு நல்லாசிரியரை தேர்ந்தெடுப்பதற்கும் விருது அளிப்பதற்கும் பல்வேறு அடிப்படை விதிகள் உள்ளன.அது ஒரு புறம் இருக்க, என்னைப் பொறுத்தவரை பின்வரும் தகுதிகள் உள்ளவரையே நல்லாசிரியராக அங்கீகரிக்க விரும்புகிறேன்: 1. இறுக்கமாக இல்லாமல் இளக்கமாகவும் குழந்தைகளின் செயல்பாடுகளில் மனம் வியந்து போகிறவராகவும் இருக்க வேண்டும்.2. குழந்தைகளின் சிறு சிறு சாதனைகளைக் கண்டு பெருமை கொள்பவராக இருக்க வேண்டும்.3. தன்னுடைய சொந்த கற்பனையையும் படைப்புத்திறனையும் கூர் தீட்டிக்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.4. குழந்தைகளின் தவறுகளைக் குத்திக்காட்டாமல், பக்குவமாக சுட்டிக்காட்டி அவர்களே திருத்திக் கொள்ள வழிவகுக்க வேண்டும்.5. குழந்தைகளை மனப்பூர்வமாகப் பாராட்டுபவராக இருக்க வேண்டும்.6. குழந்தைகள் கூறுவதை செவி கொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும்.நிறைவாக...ஒவ்வொரு பள்ளியின் அடிப்படைத் தகுதியாக படைப்பாக்கச் சிந்தனை விதைக்கப்பட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரும் நூற்றாண்டுகளிலும் சரி - அறிந்திடக் கற்பது, செயல் புரிந்திடக் கற்பது, முனைப்புடன் இருந்திடக் கற்பது, மற்றவரோடு இணைந்து வாழ்ந்திடக் கற்பது ஆகிய - கல்வியின் நான்கு ஆதாரத் தூண்களுக்கு அடிவாரமாக படைப்புத்திறனை இருந்திட வேண்டும். முன்னரே சொன்னதுபோல் குழந்தைகள் நுட்பமான உணர்வு கொண்டவர்கள், சுயமான கற்பனைக் கொண்டவர்கள், அனுசரிப்பு மனநிலை கொண்டவர்கள் பல வண்ணப் பூக்கள்போல மலர்ந்து வரும் அவர்களது இயற்கையான படைப்பு மணத்தை மேலும் மேலும் இனிமையாக்குக்கிற தோட்டமாக பள்ளி வளாகம் பரிணமிக்க வேண்டும். தோட்டத்தின் மண்ணையும், பயிர்களையும், பூக்களையும் நேசிக்கிற தோட்டக்காரர்களாக ஆசிரியர்கள் பரிணமிக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்கால வெற்றிக்கு மட்டுமல்ல, நாட்டின் - சமுதாயத்தின் எதிர்கால வெற்றிக்கும் இதுவே வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். ஆதாரங்கள்:1. டேல் டிம்பே எழுதிய `கிரியேட்டிவிட்டி' 2. எட்டுவர்ட் டீ போனோ எழுதிய `லேட்டரல் திங்க்கிங்'3. யுனெஸ்கோ வெளியீடாகிய `லேர்னிங் டு லிவ் டுகெதர்-ஹேவ் வீ ஃபெயில்டு?'

No comments: